கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து 3 ஏ.டி.எம்., மையங்களில் நேற்று நள்ளிரவு கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. கேஸ் கட்டர் மூலம் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திய மர்ம நபர்கள் கிட்டத்தட்ட 66 லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பிச் சென்றனர். மேலும் வேறு ஒரு பகுதியில் இருந்து ஏடிஎம் எந்திரம் ஒன்றையும் அலேக்காக கடத்திச் சென்றுள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ பகுதிக்குச் சென்று தடயங்களை சேகரித்து புலன் விசாரணையை துவக்கினர். முதல் கட்ட விசாரணையில் வெள்ளை நிற கார் ஒன்று இந்த சம்பவத்தின் போது சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்றதை உறுதிப்படுத்தினர்.தொடர் விசாரணையில் வடமாநில பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரியில் பணம் மற்றும் வெள்ளை காருடன் கொள்ளை கும்பல் வழி எங்கும் விபத்துகளை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்று கொண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார் தமிழக, கேரள எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் கன்டெய்னர் லாரி ஒன்று விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்வது தெரியவந்தது. பொது மக்கள் புகாரை தொடர்ந்து, உடனடியாக அந்த லாரியை போலீசார் மடக்கி பிடிக்க முற்பட்டனர்.போலீசார் பின்தொடர்வதை அறிந்ததும், அதில் இருந்த கொள்ளையர்கள் கன்டெய்னர் லாரியுடன் சினிமா பாணியில் அசுர வேகத்தில் தப்பிக்க முயற்சித்தனர். போலீசாரும் விடாமல் வெவ்வேறு வாகனங்களில் சேசிங் செய்ய, குமாரபாளையம் பகுதியே பரபரப்பானது. கிட்டத்தட்ட 30 இருசக்கர வாகனங்களில் போலீசார் லாரியை விரட்டிச் சென்றனர்.
நடு வழியில் லாரியை மடக்கி பிடித்த போது உள்ளே இருந்த கொள்ளையர்கள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் காவல் ஆய்வாளர்கள் தவமணி, ரஞ்சித் ஆகியோர் காயம் அடைந்தனர். தற்காப்புக்காக போலீசாரும் துப்பாக்கியால் சுட, ஒருவன் சம்பவ இடத்திலே சுட்டுக் கொல்லப்பட்டான். மற்றொருவன் படுகாயம் அடைய அவனை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மற்ற கொள்ளையர்கள் அருகில் இருந்த வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றுவிட, அவர்களை போலீசார் தீவிரமாக தேடி 5 பேரையும் வளைத்து பிடித்தனர்.கொள்ளை கும்பலில் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர். தொடக்க விசாரணையில் கொள்ளையர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், வட மாநிலங்களில் இதேபோன்று கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியவர்கள் என்பதையும் கண்டுபிடித்தனர்.
