சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய விமானப்படையின் 92-வது நிறுவன தினத்தையொட்டி, அக்டோபா் 6-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) சென்னை மெரீனா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. மெரீனா கடற்கரையில் 21 ஆண்டுகளுக்குப் பின்னா் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன பொதுமக்கள் சிரமமின்றி மெரீனா வந்து செல்லவும், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்கவும், அமைதியான முறையில் பொதுமக்கள் சாகச நிகழ்ச்சியைக் காணவும் வசதியாக 6,500 போலீஸாா், 1,500 ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் தலைமையில் செய்யப்பட்டுள்ளது.
