நாகர்கோவில் அருகே ஈசாந்திமங்கலத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில், ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை தளவாய்சுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதிமுக, பாஜ இடையே கூட்டணி உடைந்து, தற்போது இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் மாறி, மாறி விமர்சித்து வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜ.வுடன் இனி கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் பேசி வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை அவர் தொடங்கி வைத்தது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியது.இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாக, மாறுபட்ட வகையில் செயல்பட்டதாகவும், அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்து கொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த தளவாய்சுந்தரம் எம்எல்ஏ, தான் வகித்து வரும் அமைப்பு செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார்’ என கூறி உள்ளார்
