ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் தொடர் வேலை நிறுத்தம், தொழிலாளர்கள் மீதான கைது நடவடிக்கைகள், முதலமைச்சரின் தலையீடு, அமைச்சர்கள் பேச்சுவார்த்தை என்று கடந்த 32 நாட்களாக சாம்சங் இந்தியா நிறுவனத்தில் நடக்கும் போராட்டம் தொடர்பான செய்திகள், ஊடகங்களில் பிரதான இடம் பிடித்துள்ளன. தமிழக அரசின் நிலையை குறை கூறி, எதிர்க்கட்சிகளும் குரல் கொடுக்க ஆரம்பித்தன. அதன் பிறகு விவகாரத்தை தமிழக அரசு தீவிரமாக கையில் எடுத்தது. இதையடுத்துஅரசு, சாம்சங் நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இன்று உடன்பாடு ஏற்பட்டதாகவும், போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாகவும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
தொழில் அமைதி மற்றும் பொது அமைக்காக, போராட்டம் உடனடியாக கைவிட வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்தது.
மீண்டும் பணிக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக எந்தவித பழிவாங்கும் நடவடிக்கை எடுக்க கூடாது என்று நிறுவனத்துக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிர்வாகத்திற்கு, தொழிலாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.
தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகள் தொடர்பாக நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக, சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என்று முடிவு எட்டப்பட்டுள்ளது.
மேற்கண்ட அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு நிர்வாகமும், தொழிலாளர்களும் சமரசமாகினர்.
