தொலைதொடர்பு சேவை வழங்குவதற்கான அலைக்கற்றையை நிறுவனங்கள் பெறுவதற்கு ஏல நடைமுறை பின்பற்றப்படுகிறது. குறிப்பிட்ட அளவு அலைக்கற்றையை ஆண்டுகள் அடிப்படையில் அரசு ஏலம் விடுவதும்; அதில் ஒரு பகுதியை, பணம் செலுத்தி உரிமம் பெற்று சேவை அளித்து கட்டணம் வசூலிப்பதும் வழக்கமாக உள்ளது. இந்நிலையில், செயற்கைக்கோள் வழி இணைய சேவைக்கு, ஏலம் நடத்தி உரிமம் வழங்க வேண்டும் என்று தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு ஜியோ நிறுவனம் அண்மையில் கடிதம் எழுதியது. ஜியோவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அதே கருத்தை பிரதமர் மோடி முன்னிலையில் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டலும் வலியுறுத்தினார்.
உலகம் முழுதும் செயற்கைக்கோள் வழி இணைய சேவைக்கு, ஏல நடைமுறையின்றி, நிர்வாக ஒப்புதல் தரப்படும் நிலையில், முகேஷ் அம்பானியின் இந்த கோரிக்கை இதுவரை இல்லாதது, அரசுக்கு அழுத்தம் தரக்கூடியது என, எலான் மஸ்க் அதிருப்தி தெரிவித்திருந்தார்.எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் நிறுவனம், பல நாடுகளில் செயற்கைக்கோள் வழி இணைய சேவையில் கொடி கட்டிப் பறக்கிறது.
இந்த சூழலில், செயற்கைக்கோள் வழி இணைய சேவைக்கு, ஏலம் கிடையாது; நிர்வாக ரீதியான ஒதுக்கீடே வழங்கப்படும் என அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் உலகில் உள்ள நடைமுறையை தொடர இந்தியா விரும்புவதாகவும்; மாறுபட்ட வழியை கையாள விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
