கேரளாவுக்கு இன்று பிறவி தினம், கர்நாடகாவில் ராஜ்யோத்சவா.. தமிழ்நாடு நாள் மட்டும் ஜூலை 18 ஏன்?

Spread the love

1956ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி நாடு முழுவதும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது கேரளா,கர்னாடகா மாநிலங்கள் தங்கள் மாநில நாளை, ஆண்டுதோறும் நவ.1ம் தேதி கடைபிடித்து வருகின்றன.2019ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு, இனி நவம்பர் மாதம் 1ம் தேதி மாநில தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு அப்போதே சில எதிர்ப்புகள் எழுந்தன. நிலத்தை இழந்த நாளை, மாநில நாளாக கொண்டாட முடியாது என தமிழறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சிலர் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்திருந்தனர்.2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதியதாக பொறுப்பேற்ற திமுக அரசு, இனி ஜூலை மாதம் 18ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தது. இதற்கான காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், “1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது.பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள் என பல தரப்பிலும் நவம்பர் 1ஆம் நாள் எல்லை போராட்டத்தினை நினைவுக்கூறும் நாளாகத்தான் அமையுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும் மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி அண்ணாவால் 1968 ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள்தான் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்”தமிழ்நாடு என்கிற பெயர் நிலைத்ததற்கு பின்னால், சங்கரலிங்கனார் எனும் பெரும் தியாகியின் உயிர்த்தியாகம் மிகுந்த முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. 76 நாட்கள் வரை உண்ணாமல் இருந்த அவர், அப்படியே இறந்தும் போனார். இந்த சம்பவத்திற்கு பிறகுதான், தமிழ்நாடு எனும் பெயரை அறிவிக்கக்கூறி ஏராளமானோர் போராட்டத்தை தொடங்கினர்.1962 மார்ச்சில் நாடாளுமன்றத்தில் ‘தமிழ்நாடு’ கோரிக்கைக்காகத் தனி மசோதாவே கொண்டுவந்தபோது, அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 1964 சனவரியில் சென்னை மாநிலச் சட்டமன்றத்தில், தமிழ்நாடு பெயர் சூட்டத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும் அத்தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னாளில் ஆட்சிக்கு வந்த அண்ணாவின் தலைமையிலான திமுக அரசு 1967, ஏப்ரல் 14 அன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ‘தமிழக அரசு’ ஆக மாறியது. அதன் தொடர்ச்சியாக, 1968 சூலை 18இல் சென்னை மாநிலத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பின்னர் நவம்பர் 23, 1968 இல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதையடுத்து திசம்பர் 1, 1968இல் தமிழ்நாடு முழுக்கப் பெயர் மாற்றம் விழாவாகக் கொண்டாடப்பட்டபோது “சங்கரலிங்கனாருக்கு நன்றியும் வணக்கமும்” தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *