காமராஜர், ஈ.வெ.ரா., அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரையும், கட்சியின் கொள்கைகளையும் உறுதியாக பின்பற்றுவோம். கட்சியின் கொள்கைகளுக்கு ” மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள்” என்று பெயர். ஒரேநாடு ஒரே தேர்தல் என்பதை சட்டமாக்குவதற்காக பா.ஜ., அரசுக்கு கண்டனம். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை. உண்மையான சமூக நீதியை நிலைநாட்டிட தமிழக அரசு முதலில் சாதி வாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வை காலதாமதமின்றி உடனே நடத்த வேண்டும். மருத்துவம் போலவே கல்வியும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும். கோவையின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் பணிகளை விரைந்து துவங்க வேண்டும். இலங்கை தொடர்பான விவகாரங்களில் தமிழக அரசை ஆலோசித்து வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். இலங்கை தூதர் ஆக தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும். இலங்கை தமிழருக்கான நிரந்தர தீர்வைக் கொண்டு வர பொது வாக்கெடுப்பை மத்திய மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும். அரசின் வருவாயை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மின் கட்டணம், பால்விலை, சொத்து வரி உயர்வு போன்று மக்கள் மீது மேலும் வரிச் சுமையை மட்டுமே அதிகமாக விதித்த தி.மு.க., அரசுக்கு கண்டனம். தமிழகத்தில் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது மக்கள் நலனைக் காட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள குறிப்பிட்ட சிலரின் நலனிலேயே அக்கறையுடன் செயல்பட்டு வரும் தி.மு.க., அரசுக்கு கண்டனம். மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். மதுக்கடைகளை கால நிர்ணயம் செய்து மூட வேண்டும். சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும். தமிழ் மண்ணின் மூவேந்தர்களான சேரர், சோழர், பாண்டியர் ஆட்சியின் வரலாற்றுப் பெருமைகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் சென்னையில் பிரமாண்டமான அருங்காட்சியகம் கட்ட வேண்டும். தமிழக மக்களின் வரிப்பணத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படும் பஸ் ஸ்டாண்டுகள், பூங்காக்கள், நூலகங்கள் மற்றும் கலையரங்கங்களுக்கு தமிழ் மண்ணில் இருந்து நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த சுதந்திர போராட்டத் தியாகிகள், மொழிப்போர் தியாகிகள் பெயரை சூட்ட வேண்டும். ஆண்டுதோறும் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு அரசு சார்பில் கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் விருதும் பண முடிப்பும் வழங்க வேண்டும். தமிழகத்தில் முதியோர் நலனை உறுதி செய்யும் கொள்கை வரைவை உருவாக்கி நிதி ஒதுக்கீடு செய்து சிறப்புத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். கன்னியாகுமரியில் அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்க திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது. இதுபோன்று அபாயம் வளைவிக்கும் திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும். கூட்டாட்சி அமைப்பிற்கு எதிரான தாக்குதலாக உள்ள வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்திற்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் ‘தகைசால் தமிழர் விருது ‘ வழங்கும் தமிழக அரசுக்கு வரவேற்பு. குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு திட்டத்தைகொண்டு வந்துள்ளது. இதற்கு வரவேற்பு. த.வெ.க., மாநாட்டிற்கு வரும் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பது ஆகிய 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
