கடந்த செப்., 27ல் நடந்த த.வெ.க., முதல் மாநில மாநாட்டில் பேசிய விஜய், ‘திராவிடமும், தமிழ் தேசியமும் எங்களது கட்சி கொள்கையாக இருக்கும்’ என்றார். அது மட்டுமின்றி, ‘ஆ ஊ என்று சத்தமா கோபமா பேசி விட்டால் போதுமா’ என்றும் கிண்டல் தொனியில் விஜய் பேசியிருந்தார். சீமானை மட்டம் தட்டும் வகையில் விஜய் பேசியதாக விமர்சனங்கள் எழுந்தன.இதையடுத்து விஜய் பற்றி சீமான் தாறுமாறாக விமர்சனம் செய்தார். சீமான் கூறியதாவது: ‘திராவிடமும் தமிழ் தேசியமும் வேறு வேறு. விஜய் கொள்கை எங்கள் நிலைப்பாட்டுக்கு எதிரானது. திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றல்ல. சாம்பார் என்றால் சாம்பார் என சொல்ல வேண்டும்; கருவாட்டு குழம்பு என்றால் கருவாட்டு குழம்பு என்று சொல்ல வேண்டும். இரண்டையும் சேர்த்து, கருவாட்டு சாம்பார் என்று சொல்லக் கூடாது.கூட்டத்தை வைத்து எதுவும் கணக்கு போடக் கூடாது. நயன்தாராவை பார்க்க 4 லட்சம் பேர் கூடினார்கள். விஜயகாந்திற்கு கூடாத கூட்டமா விஜய்க்கு கூடியிருக்கிறது? இவ்வாறு சீமான் பேசினார். இந்த நிலையில் விஜய் இன்று சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் சமூகவலைதளத்தில், ‘நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர், சீமானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன.
