இரண்டு கிராமங்களிடையே உள்ள உள்ளூர் பிரச்னை காரணமாக, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு, நீர்வரத்து தடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. உத்திரமேரூர் மருதம் காப்புக்காட்டில் இருந்து வரும் தண்ணீர், நெல்வாய் ஏரி, வெள்ளப்புதுார் ஏரி, சித்துார் ஏரி, வளையபுத்துார் ஏரிகளுக்கு செல்ல கால்வாய் அமைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் வனத்துறை முயற்சியால், வெள்ளப்புதுார் முதல் வேடந்தாங்கல் வரையிலான, 18 கி.மீ., கால்வாய் துார்வாரப்பட்டது. இதனால், இந்த கால்வாய் அமைப்பில், தண்ணீர் செல்வதில் எந்த தடையும் இல்லை. வளையபுத்துார் ஏரியில் இருந்து, வேடந்தாங்கல் ஏரிக்கு வரும், 1.4 கி.மீ., கால்வாயும், துார்வாரி சுத்தம் செய்யப்பட்டது. இருப்பினும், வளையபுத்துார் ஏரியில் இருந்து உபரி நீரை வேடந்தாங்கலுக்கான கால்வாயில் திறந்து விடாமல், மதுராந்தகம் ஏரிக்கு செல்லும் கால்வாயில் மட்டும் திறக்கப்படுகிறது. பராமரிப்பு பணி காரணமாக, மதுராந்தகம் ஏரியில் நீர் இருப்பு வைக்கப்படுவதில்லை.மதுராந்தகம் ஏரிக்கு செல்லும் நீர், வீணாக கடலுக்குதான் செல்கிறது. அதேநேரம், வேடந்தாங்கலுக்கு போதிய நீர் வரத்து இல்லாத சூழல் நிலவுகிறது. வனத்துறையினர், நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும், வளையபுத்துார் கிராம மக்கள், வேடந்தாங்கலுக்கு நீர் செல்வதை தடுக்கின்றனர்.தண்ணீர் வழங்கும் எங்கள் கிராமத்துக்கு எந்த பயனும் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில், வளையபுத்துார் கிராம மக்கள் தண்ணீரை தடுக்கின்றனர். இந்த விஷயத்தில், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு, வளையபுத்துார் மக்களை சமாதானப்படுத்தி, வேடந்தாங்கலுக்கு இயல்பான முறையில் நீர்வரத்தை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
