டங்ஸ்டன் ’ திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக் கோரி, அரிட்டாபட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள், 15 கி.மீ நடைபயண போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலூர் பகுதி ஒரு போக பாசன விவசாயிகள் மற்றும் மேலூர் தொகுதி மக்கள் ஒன்றிணைந்து மதுரை ,திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள சிக்கம்பட்டி டோல்கேட் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் நடை பயணமாக சென்று தல்லாகுளம் மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர். இதன்படி செவ்வாய்க்கிழமை காலை சுமார் 10 மணி அளவில் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். கிராம மக்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டத்தால், சிட்டம்பட்டி சுங்கச்சாவடி துவங்கி தல்லாகுளம் தபால் நிலையம் வரை கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து தங்களது நடை பயணத்தை தொடங்கினர். வழி நெடுகிலும் ஆங்காங்கே திரண்டு இருந்த விவசாயிகள், பொதுமக்களும் நடை பயணத்தில் இணைந்து கொண்டனர். வேளாண்மை கல்லூரி ஒத்தக்கடை, உத்தங்குடி,மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மாட்டுத்தாவணி வழியாக தல்லாகுளம் மத்திய தபால் நிலையம் நோக்கி சென்றனர். அவர்கள் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். இத்திட்டத்தை முழுமையாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் ஓயாது. இத்திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யவில்லை என்றால் இன்னொரு ஜல்லிக்கட்டு போராட்டமாக மாறும். விவசாயிகள் இளைஞர்கள் பெண்களை மாணவர்களை திரட்டி தமிழகம் முழுவதும் இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
