ஸ்ரீஹரிகோட்டா: கடந்த டிச.,30ல் விண்ணில் செலுத்தப்பட்ட 220 கிலோ எடை கொண்ட இரு விண்கலன்களை இணைக்கும் நாளைய நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.கடந்த டிச.,30ம் தேதி , தலா 220 கிலோ எடை கொண்ட சேஸர், டார்கெட் ஆகிய விண்கலன்களை உள்ளடக்கிய ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள், பி.எஸ்.எல்.வி. சி60 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதோடு, 24 ஆய்வு கருவிகளும் அனுப்பி வைக்கப்பட்டன.இதைத் தொடர்ந்து, ஜன.,07 அன்று இரு விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப்பணியை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தரைக்கட்டுப்பாட்டு மையத்தின் நிலைப்படுத்துதலில் ஒப்புதல் பெற முடியாததால், இரு விண்கலன்களையும் ஒருங்கிணைக்கும் திட்டத்தை ஜன.,9ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக இஸ்ரோ அறிவித்தது. பூமியில் இருந்து 475 கி.மீ., சுற்றுவட்டப் பாதையில் இரு விண்கலன்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. விண்கலன்கள் 225 மீட்டர் இடைவெளியில் இருந்த போது, திட்டமிட்டபடி சுழற்சி மேற்கொள்ள முடியவில்லை. ஆனால், விண்கலன்கள் பாதுகாப்பாக உள்ளன’, என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த முயற்சியில் இரு விண்கலன்களையும் இணைக்கும் முயற்சி வெற்றி பெற்றால், விண்வெளியில் இருவிண்கலன்களை ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பத்தை பெற்ற 4வது நாடு இந்தியாவாகும்.
