திருப்பரங்குன்றம் மலையில், வரலாற்று ரீதியாகவும், கலாசார ரீதியாகவும், இரு சமூகங்களின் சடங்குகளும் அமைதியான முறையில் நடைபெற்று வந்துள்ளன. அவற்றின் நோக்கம் பிற மதங்களின் புனிதத்தைக் களங்கப்படுத்துவது அல்ல. கடந்த கால நீதிமன்ற தீர்ப்புகளும் அதைத் தெளிவுபடுத்தியுள்ளன. 1920இல் மதுரையின் விசாரணை நீதிமன்றத்தில், திருப்பரங்குன்றம் தேவஸ்தானம் சார்பில் தொடரப்பட்ட ஒரு வழக்குதான் இதன் தொடக்கப்புள்ளி. 1923 ஆகஸ்ட் 23 அன்று தீர்ப்பளித்தார். பிரிட்டிஷ் அரசின் கோரிக்கையான மலையின் ஆக்கிரமிக்கப்படாத பகுதிகள் அரசாங்க சொத்து (அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள்) என்று கூறியதற்க்கு எதிராகவும், தேவஸ்தானத்திற்கு ஆதரவாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், நெல்லித்தோப்பு, தர்கா மற்றும் அதன் கொடிக்கம்பம் அமைந்துள்ள பகுதி, அவற்றை நோக்கிச் செல்லும் படிக்கட்டுகள் ஆகியவை முஸ்லிம் சமூகத்திற்குச் சொந்தமானது என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம்கள் அதிருப்தி அடைந்து முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் சார்பாக, மேல்முறையீடு வழக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 1926ஆம் ஆண்டு தொடரப்பட்டது. அரசின் தலையீடு இருக்க வேண்டுமென்று கருதிய மெட்ராஸ் உயர்நீதிமன்றம், அரசை குறுக்கு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்து தாமதமாக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், அதே நாளில் மெட்ராஸ் உயர்நீதிமன்றம், அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. மெட்ராஸ் உயர்நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பை எதிர்த்துதான், 1930இல் லண்டனின் பிரிவி கவுன்சிலில் மேல்முறையீடு செய்தது மதுரை தேவஸ்தானம். 1930இல் பிரிவி கவுன்சிலில் தொடரப்பட்ட ‘திருப்பரங்குன்றம் முதலிய, மதுரை தேவஸ்தானம் (மேல்முறையீட்டாளர்)- அலிகான் சாஹிப் மற்றும் பிறர் (பிரதிவாதிகள்)’ இடையிலான வழக்கு (P.C. Appeal No. 5/1930). இது மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள மலை யாருக்குச் சொந்தமானது என்பது தொடர்பான ஒரு மேல்முறையீட்டு வழக்கு. வழக்கை விசாரித்த பிரிவி கவுன்சில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்து, மதுரை விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. நெல்லித்தோப்பு, தர்கா மற்றும் அதன் கொடிக்கம்பம் அமைந்துள்ள பகுதி, அவற்றை நோக்கிச் செல்லும் படிக்கட்டுகள் ஆகியவை முஸ்லிம் சமூகத்திற்குச் சொந்தமானது என்பதும், தேவஸ்தானம் உரிமை கோரியவை அனைத்தும் (தர்காவுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகள் தவிர்த்து முழு திருப்பரங்குன்றம் மலை, கிரிவீதி, சன்னதி வீதி) கோவிலுக்கே சொந்தமானது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. லார்ட் அட்கின்சன், லார்ட் தாங்கர்டன், லார்ட் மேக்மில்லன், சர் ஜார்ஜ் லோண்டஸ், சர் தின்ஷா முல்லா ஆகியோர் அடங்கிய குழு இந்தத் தீர்ப்பை 1931 மே மாதம் 12ஆம் தேதி வழங்கியது.
