பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் மூலம் குறிவைத்து தகர்த்த 9 பயங்கரவாத முகாம்கள் பற்றிய தகவல்களை அரசு பகிர்ந்துள்ளது. 1.முசாஃபர்பாத்தில் உள்ள சாவய் நாலா முகாம்: இது லஷ்கர் இ தொய்பாவின் பயிற்சி முகாமாக இருந்தது. கடந்த 2024, அக்.20-ல் சோன்மார்க்கில் நடந்த தாக்குதல், 2024, அக்.24 குல்மார்க்கில் நடந்த தாக்குதல், 2025. ஏப்.22 பஹல்காமில் நடந்த தாக்குதல் ஆகியவற்றில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு இங்குதான் பயிற்சி அளிக்கப்பட்டது. 2.முசாஃபர்பாத்தில் உள்ள சைத்னா பிலால் முகாம்: இது லஷ்கர் இ முகம்மதுவின் ஒரு நிலையாகும். இது ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மற்றும் பதுங்குகுழிகள் கொண்ட தளமாகும். 3.கோட்லியில் உள்ள குல்பூர் முகாம்: இது ஜம்முவின் ராஜோரி மற்றும் பூஞ்ச் பகுதிகளில் இருந்த லஷ்கர் இ தொய்பாவின் பேஸ் கேம்ப்களாகும். பூஞ்ச் பகுதியில் 2023, ஏப்.20 மற்றும் 2024, ஜுன் 9-ல் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் இங்கு பயிற்சி பெற்றவர்கள். 4.பிம்பாரில் உள்ள பா்னாலா முகாம்: இங்கும் ஆயுதங்கள், வெடிப் பொருட்களைக் கையாளுதல் மற்றும் பதுங்கி வாழ்தலுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 5.கோட்லியில் உள்ள அப்பாஸ் முகாம்: லஷ்கர் இ தொய்பாவின் பையாதீன் இங்கு உருவாக்கப்பட்டது. இது 15 பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் திறன் கொண்டது. 6. சியால்கோட்டில் உள்ள சர்சால் முகாம்: இந்தாண்டு மார்ச் மாதம் ஜம்மு காஷ்மீரில் நான்கு போலீஸார் கொல்லப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் இந்த முகாமில் தான் பயிற்சி பெற்றனர். 7. மெஹ்மூனா ஜோயா முகாம்: பதன்கோட் விமான படைத்தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்த முகாமில் இருந்து தான் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது. 8. முரித்கேயில் உள்ள மார்காஸ் தைபா முகாம்: கடந்த 2008-ல் நடந்த மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் இந்த முகாமில் பயிற்சி பெற்றனர். அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி இந்த முகாமில் பயற்சி பெற்றவர்கள். 9. பஹவல்புரில் உள்ள மார்கஸ் சுபனல்லா: இது லஷ்கர் இ முகம்மதுவின் தலைமையகம். ஆட்கள் சேர்ப்பு, பயிற்சி மற்றும் போதனைகள் இங்கு மேற்கொள்ளப்பட்டன.
