நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கான அரசு வழக்கறிஞர் ( US Attorney) அலுவலகம் பதிவு செய்துள்ள குற்றச்சாட்டின்படி, “இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சூரிய ஒளி மின் விநியோக ஒப்பந்தங்களுக்காக, தோராயமாக 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை, (கிட்டத்தட்ட ரூ. 2 ஆயிரம் கோடி) இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்க அதானி ஒப்புக்கொண்டுள்ளார் இதனை மறைத்து, அமெரிக்காவில் உள்ள ஊழலுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் வழக்கங்களை மீறி, அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து கடனாகவும், பத்திரங்கள் மூலமாகவும் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை அதானி குழுமம் பெற்றுள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அதானி மட்டுமின்றி, வினித் எஸ் ஜெய்ன் ரஞ்சித் குப்தா, ரூபேஷ் அகர்வால், சௌரப் அகர்வால், தீபக் மல்ஹோத்ரா உட்பட 7 நபர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. இந்த வழக்கில் அதானி குழுமம் மட்டுமின்றி அஜூர் என்ற நிறுவனத்தின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அது தொடர்பாக பொய்களைக் கூறி அதானி குழுமம் அமெரிக்காவிலும், உலக நாடுகளில் இருந்தும் முதலீடுகளைப் பெற முயற்சி செய்துள்ளது,” என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
சோலார் எனெர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI) இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பித்தக்க எரிசக்தி துறையின் கீழ் செயல்படும் ஒரு நிறுவனமாகும்.இந்தியாவில் புதுப்பித்தக்க ஆற்றலை அதிகரிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் 2019-2020-க்கு இடைப்பட்ட காலத்தில் அஸூர் பவர் (Azure Power) மற்றும் அதானியின் க்ரீன் எனெர்ஜி நிறுவனத்தின் மானியத்தைப் பெறும் நிறுவனம் ஒன்றுக்கும் சூரியஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஒப்பந்தத்தை வழங்கியது. அதன்படி அஜூர் நிறுவனம் 4 GW மின்சாரத்தையும், அதானி க்ரீன் எனெர்ஜியின் மானியம் பெறும் நிறுவனம் 8 GW மின்சாரத்தையும் SECI-க்கு வழங்க வேண்டும். SECI அந்த மின்சாரத்தை விலைக்கு வாங்கி, விலையை நிர்ணயம் செய்து, இந்த 12 GW மின்சாரத்தை, மாநிலங்களின் மின் விநியோக நிறுவனங்களுக்கு (discoms) வழங்கும். ஆனால் இந்த மின்சாரத்தின் விலை அதிகமாக இருந்த காரணத்தால், SECI-க்கு மின் விநியோக நிறுவனங்களிடம் மின்சாரத்தை விற்பது கடினமானதாக இருந்தது” என்று அமெரிக்காவில் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும்,” இதனை கருத்தில் கொண்டு அஸூர் மற்றும் அதானி குழுமத்தின் உறுப்பினர்கள் (இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 நபர்கள்) மாநில அரசு அதிகாரிகளிடம், SECI-யிடம் மின்சாரத்தை வாங்க வேண்டும் என்றும் அதற்கு ஈடாக லஞ்சம் வழங்கவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் SECI-யுடன் மின்சார விற்பனை ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ளும். பிறகு அதானி மற்றும் அஸூர் நிறுவனங்கள், SECI-யுடன் Power Purchase ஒப்பந்தங்களை உறுதி செய்து கொள்ளும். இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் தொடர்ச்சியாக மாநில அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்” என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது இதன் மூலமாக அடுத்த 20 ஆண்டுகளில், 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான வருவாயை அதானி குழுமத்தால் ஈட்ட இயலும். இதற்காக அதானி பலமுறை இந்திய அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்துள்ளார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது. மேலும் இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் கூறியுள்ளது அதானி குழுமம்.
