சிவகங்கை: மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிறாவயல் ஜல்லிக்கட்டு ஜன.,16 ல் நடக்க உள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகளை விழா கமிட்டியினர் துவக்கியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் தை பொங்கலை முன்னிட்டு ஜன., முதல் மே வரை சிறாவயல், கண்டுபட்டி, அரளிப்பாறை உட்பட 150 க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமஞ்சுவிரட்டுக்கள் நடைபெறும். குறிப்பாக மாட்டுப்பொங்கல் அன்று வரும் சிறாவயல் ஜல்லிக்கட்டு, ஜன. 16ல் நடைபெற உள்ளது. சிறாவயல் ஜல்லிக்கட்டில் பங்கேற்க சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும். இது தவிர மஞ்சுவிரட்டு பொட்டலில் 500க்கும் மேற்பட்ட கட்டு மாடுகளை அவிழ்த்து விடுவர்.சிறாவயல் ஜல்லிக்கட்டு விழாவை முன்னிட்டு கிராம கமிட்டி தலைவர் வேலுச்சாமி தலைமையில் நிர்வாகிகள் முதற்கட்ட பணிகளை துவக்கியுள்ளனர். ஜல்லிக்கட்டு நடக்கும் பொட்டலில், மாடுகள் அவிழ்த்துவிடும் வாடி வாசல், பார்வையாளர் அமரும் இடம், பொட்டலில் காளைகள் நின்று விளையாட தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
