அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த போட்டியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 1200 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்பதற்காக வந்த 959 காளைகளில் மருத்துவ பரிசோதனையில் 3 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. மீதமுள்ள 956 காளைகள் கோவில் காளைகள் உட்பட 1000 காளைகள் இன்று களம் கண்டன.மொத்தம் 9 சுற்றுகள் நடத்தப்பட்டது. மொத்தம் 1000 காளைகள் அவிழ்க்கப்பட்டன. அதில் சேலத்தை சேர்ந்த பாகுபலி காளை, சிறந்த காளைக்கான முதல் பரிசை வென்றது. அந்த காளையின் உரிமையாளருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பாக டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், கன்று உடன் கூடிய நாட்டு பசுவும் வழங்கப்பட்டது. வக்கீல் பார்த்தசாரதியின் காளை இரண்டாம் பரிசை தட்டிச்சென்றது. அவருக்கு மோட்டார் பைக், விவசாய ரோட்டைவிட்டர் கருவி ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது. புதுக்கோட்டை கண்ணன் என்பவரது காளைக்கு 3வது பரிசாக எலெக்ட்ரிக் பைக் மற்றும் இலங்கை செந்தில் தொண்டமான் காளைக்கு 4வது பரிசாக மோட்டார் பைக்கும் வழங்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரருக்கான முதல் பரிசை 20 காளைகளை பிடித்த அபி சித்தர் வென்றார். இவருக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், நாட்டு பசு மற்றும் கன்று பரிசாக வழங்கப்பட்டது. 13 காளைகளை அடக்கிய ஸ்ரீதர் 2வது பரிசை பெற்று, ஷேர் ஆட்டோ வாகனத்தையும், 10 காளைகளை அடக்கி விக்னேஷ் என்பவர் 3வது பரிசாக ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக்கையும் வென்றனர். 4வது பரிசாக 9 காளையை பிடித்த அஜய் என்பவருக்கு டிவிஎஸ் XL வழங்கப்பட்டது. அத்தனை பரிசுகளையும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
