இந்தி எதிர்ப்பு போரில் சிறை சென்று உயிர் நீத்த தாளமுத்து மற்றும் நடராசனின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். கடந்த 1938ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி தொடங்கிய மொழிப்போர் ஒன்றரை ஆண்டுக்காலம் தொடர்ந்து நடந்தது. இதில் மாணவர்கள் பலரும் பங்கு கொண்டனர். பல்லாயிரம் பேர் சிறை சென்றனர். சென்னை அடையார், தியாசபிகல் பள்ளி முன்பு நடைபெற்ற போராட்டத்தில் சென்னை, பெரம்பூர் பண்ணைக்கார ஆண்டியப்பன் தெருவில் வசித்துவந்த லட்சுமணன்-அம்மாக்கண்ணு இணையருக்கு 1919ம் ஆண்டு பிறந்த நடராசன் கலந்து கொண்டதால் கைது செய்யப்பட்டார். அவருக்கு 6 மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த கால கட்டத்தில் சிறையில் நோயால் பல நாட்கள் அவதிப்பட்ட அவர் 10 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் 1939ம் ஆண்டு ஜன.15ம் தேதி தமிழுக்காக தன்னை பலியாக்கி கொண்டவர்.
