லண்டனில் இசையமைப்பாளர் இளையராஜா தனது நீண்ட நாள் கனவான சிம்பொனியை இந்திய நேரப்படி இன்று (மார்ச் 9) நள்ளிரவு 12.30 மணிக்கு அரங்கேற்றினார். கடந்த ஆண்டு, தான் சிம்பொனி எழுதி வருவதாகவும் விரைவில் அதனை அரங்கேற்ற உள்ளதாகவும் இளையராஜா தனது ரசிகர்களுக்கு அறிவித்தார். இதற்காக இளையராஜா முழு மூச்சில் தீவிரமாக பணியாற்றி வந்தார்.கடந்த மார்ச் 6-ஆம் தேதி சென்னையில் இருந்து இளையராஜா லண்டன் சென்றார். வேலியன்ட் என்று பெயரிடப்பட்ட சிம்பொனியை லண்டனில் உள்ள ஈவன்டின் அப்பல்லோ அரங்கத்தில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் இளையராஜா அரங்கேற்றினார். மொத்தம் 3,665 இருக்கைகள் கொண்ட அரங்கத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தன. நிகழ்ச்சியை உலகின் மிகச்சிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ரா இசைத்தனர். இளையராஜா சிம்பொனி அரங்கேற்றம் முடிந்ததும் ரசிகர்கள் கரகோஷமிட்டு ஆரவாரம் செய்தனர்.இந்தியாவிலிருந்து முதல் முறையாக ஒரு தமிழர் சிம்பொனியை அரங்கேற்றுவது நமக்கு பெருமை தரக் கூடிய விஷயமாகும். மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி வரிசையில் இளையராஜாவும் தனது சிம்பொனியை அரங்கேற்றினார்.
