இலங்கையில், காலை 7 மணிக்குத் துவங்கிய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும். வாக்குப்பதிவு முடிவடைந்த சில மணி நேரத்திலேயே வாக்கு எண்ணிக்கை துவங்கும். சனிக்கிழமை நள்ளிரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் புதிய ஜனாதிபதி யார் என்பது தெரியவரலாம்.இலங்கையில் ஜனாதிபதி தேர்தலைப் பொருத்தவரை, விருப்ப வாக்கு அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி வாக்காளர்கள், வேட்பாளர் பட்டியலில் இருந்து மூன்று பேரைத் தேர்வுசெய்யலாம். 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றவரே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறவில்லையென்றால், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் மட்டும் கணக்கில் எடுக்கப்பட்டு, அவர்களுக்கான விருப்ப வாக்குகள் எண்ணப்படும். அதில் அதிக வாக்குகளைப் பெற்றவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.
