இந்திய வம்சாவளியை சேந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த கடந்த ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் இவர்கள் விண்வெளிக்கு சென்றனர். அங்கிருந்து ஆய்வு நடத்திவிட்டு, ஜூன் 14ஆம் தேதி பூமிக்கு திரும்ப திட்டமிட்டு இருந்தனர். வெறும் 8 நாட்கள் மட்டுமே விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வு செய்யும் திட்டத்துடன் இவர்களை நாசா அனுப்பி வைத்தது. ஆனால், சுனிதா வில்லியம்ஸ் உள்பட இருவரும் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து விண்வெளி மையத்தில் 100- நாட்களுக்கும் மேலாக உள்ள அவர்களை பூமிக்கு அழைத்து வர நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. நாசா வேண்டுகோள்படி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்தது. இதன்படி புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கன்வெர்லில் இருந்து டிராகன் விண்கலம் விண்ணுக்கு புறப்பட்டது. பால்கான் 9 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டடது. இரண்டு விண்வெளி வீரர்கள் இந்த விண்கலத்தில் உள்ளனர். மேலும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் திரும்புவதற்கு வசதியாக இரண்டு இருக்கைகள் காலியாக உள்ளது. இந்த விண்கலம் தற்போது விண்ணுக்கு புறப்பட்டுள்ளது. இந்த விண்கலம் பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புகிறது. அப்போது சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் அழைத்து வரப்பட இருக்கிறார்கள். இந்திய நேரப்படி நேற்று இரவு 10.47 மணிக்கு விண்கலம் விண்ணில் பாய்ந்தது.. இந்த விண்கலத்தில் நாசாவை சேர்ந்த வீரர் நிக் ஹாக்வே மற்றும் ரஷ்ய வீரர் அலெக்ஸாண்டர் கோர்பனோவ் ஆகியோர் உள்ளனர்.
