நியோமேக்ஸ் நிறுவன சொத்து களை முடக்குவதற்கான அரசாணை வெளியிடாவிட்டால், பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும் என ஐகோர்ட் கிளை எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் இருந்து பெற்ற முதலீட்டுத்தொகை ரூ.6 ஆயிரம் கோடி வரை வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது. இதனால், இந்நிறுவனத்தின் இயக்குனர்கள், ஏஜென்ட்கள் உள்ளிட்ட பலர் கைதாயினர். இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களும், இதற்கு ஆட்சேபம் தெரிவித்தும் சிலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.அப்போது நியோமேக்ஸ் நிறுவனத்தின் சார்பில், நிறுவனத்தின் பெயரில் வாங்கியுள்ள சொத்துகளை முதலீட்டாளர்களுக்கு வழங்க தயாராக உள்ளதாகவும், பணத்தை திருப்பித் தரவும் தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டது. அரசு தரப்பில், ‘‘நியோமேக்ஸ் நிதி நிறுவன சொத்துகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி மற்றும் உள்துறை செயலரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது. எனவே, உரிய கால அவகாசம் வழங்க வேண்டும்’’ என வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘சொத்துகளை முடக்குவதற்கான அரசாணை பிறப்பிக்க ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இனியும் அவகாசம் அளிக்க முடியாது. நாளைக்குள் (அக்டோபர் 19ம் தேதிக்குள் அரசாணை வெளியிட வேண்டும். தவறினால், பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி மற்றும் உள்துறை செயலர் ஆகியோர் ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும்’’ என எச்சரித்து, விசாரணையை தள்ளி வைத்தார்.
