பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்த பின்னர், கடந்த ஜூலை மாதம் எட்டு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரிக்கு ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களை நியமித்தது, அவர்களில் ஏழு பேர் புதியவர்களாகவும், இருவர் வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநருக்கான பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்த பின்னரும், பலரும் தங்களது பதவிகளில் நீடிக்கின்றனர். அதனால் அவர்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிப்பதற்கான பட்டியலை ஒன்றிய பாஜக அரசு தயாரித்து வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்கும் ஒன்றிய பட்ஜெட் கூட்டத்தொடரின் முதலாவது கூட்டத்துக்குப் பிறகு, ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்த ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு பதிலாக வேறு நபர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்தி பென் உள்ளிட்ட பலர், வேறு மாநிலங்களில் சில ஆண்டுகள் ஆளுநராக இருந்து விட்டு, தற்போது பதவி வகிக்கும் மாநிலத்திலும் பதவிக்காலத்தின் மீதமுள்ள ஆண்டுகளை நிறைவு செய்து வருகின்றனர். இவ்வாறு பதவிக்காலத்தை கடந்தும் சில ஆளுநர்கள் பதவியில் தொடர்வதை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதனால் மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிந்த பின்னர், ஆளுநர்கள் நியமனத்தில் சில நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
