வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் முன்பெல்லாம் கட்டுப்பாட்டு அறை, இ-மெயிலில் மிரட்டல்களை விடுத்து வந்தனர். தற்போது அவர்கள் சில சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்தி மிரட்டல் விடுக்கின்றனர். வெடிகுண்டு மிரட்டலால் டிக்கெட் வாங்கி விமானத்தில் பயணம் செய்பவர்கள் அனுபவிக்கும் மன உளைச்சல் விவரிக்க முடியாதது. பெரும்பாலும், புறப்பட்ட பிறகு ெவடிகுண்டு மிரட்டல் செய்தி வருவதால், மீண்டும் விமான நிலையம் திரும்புவதா? அல்லது வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடுவதா? என்ற குழப்பங்களும் நடக்கிறது. அதனால் பாதுகாப்பு ஏஜென்சிகள் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (பிசிஏஎஸ்) மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (ஐஎஸ்எஃப்) மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
