சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024: அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்

Spread the love

இந்தியாவின் கிளாசிக்கல் செஸ் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் கடைசி மற்றும் 7-வது சுற்றில் முதல் போர்டில் நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்காவின் லெவோன் அரோனியன், ஈரானின் அமீன் தபதாபேயியுடன் மோதினார். இந்த ஆட்டம் 15-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 2-வது போர்டில் செர்பியாவின் அலெக்ஸி சரானா, இந்தியாவின் விதித் குஜ்ராத்தியை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் 48-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. 3-வது போர்டில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரான்ஸின் மாக்சிம்வாச்சியர் லாக்ரேவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன் எரிகைசி 38-வது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிரா செய்தார். 4-வது போர்டில் ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூ, இந்தியாவின் அரவிந்த் சிதம்பரத்தை எதிர்கொண்டார். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அரவிந்த் சிதம்பரம் 64-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.கடைசி சுற்றின் முடிவில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் லெவோன் அரோனியன், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி ஆகியோர் தலா 4.5 புள்ளிகளை பெற்றிருந்தனர். இதனால் சாம்பியன் பட்டம் யாருக்கும் என்பதை தீர்மானிக்க டை பிரேக்கர் நடத்தப்பட்டது. இதில் முதல் டைபிரேக்கரில் லெவோன் அரோனியன், அர்ஜுன் எரிகைசி மோதினார்கள். 2 ஆட்டங்கள் கொண்ட டை பிரேக்கரில் முதல் ஆட்டத்தில் லெவோன் அரோனியனும், 2-வது ஆட்டத்தில் அர்ஜுன் எரிகைசியும் வெற்றி பெற்றார்கள். இதையடுத்து சடன்டெத் முறை கடைபிடிக்கப்பட்டது. இந்த ஆட்டம் டிரா ஆனது. இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய லெவோன் அரோனியன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து லெவோன் அரோனியன், அரவிந்த் சிதம்பரத்துடன் டை பிரேக்கரில் பலப்பரீட்சை நடத்தினார். இதில் இரு ஆட்டங்களிலும் அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு சாம்பியன் பட்டத்துடன் ரூ.11 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அரவிந்த் சிதம்பரம், தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *